இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உலகளாவிய வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், இவ்வாறு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோவை இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தினால், இவர்கள் மீது வரி சுமத்தப்படாது.
இந்த இலக்கத்தைக் கொண்டு சீகிரியா மற்றும் நூதனசாலைக்கு இலவசமாக செல்ல முடியும். மேலும் வங்கி கணக்குகளை இலகுவாக திறக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான விசேட வேலைத்திட்டங்களின் மூலம் புதிய இலங்கைப் பிரஜைகளை நாம் உருவாக்க முடியும் என தெரிவித்தார். இதேவேளை, இலாபத்தை பெற்றுக்கொள்ளும் புண்ணியஸ்தலங்கள் மீது வரி விதிப்பதில் தவறில்லை. புண்ணியஸ்தலங்களின் நோக்கம் இலாபம் பெறுவது அல்ல.
இறைவரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் 2020ஆம் ஆண்டில் நாட்டின் நேரடி வருமானத்தை 40வீதமாக அதிகரிக்கவும், மறைமுக வரியை 60வீதமாக குறைக்கவும் முடியும் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.