அனிதாவின் பெயரில் புலமைப்பரிசில் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தனது கல்வி உரிமைக்காக போராடி உயிரை மாய்த்துக் கொண்ட தமிழக மாணவி அனிதாவுக்கு தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அவரது பெயரில் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

01-1504263188-anitha-tnstudents-neetexamspoil6

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா சண்முகம் தன்னைத்தானே அழித்துத் தனது உயிரை மாய்த்த சம்பவம், உலகத் தமிழ் மக்களின் இதயங்களைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நீட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி போராடிய அவருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் செலுத்தும் அதேவேளை, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினரதும் மக்களதும் துயருடன் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.

அனிதா முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மாணவர்களும், மக்களும் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமை கலந்த ஆதரவினை வெளிப்படுத்திக் கொள்கிறது.

தனது மருத்துவக் கல்விக்கான வாய்ப்பு நீட் (NEET) தேர்வு முறையால் பறிக்கப்பட்டதை எதிர்த்து அனிதா சட்டரீதியாகப் போராடி வெற்றியடைய முடியாத நிலையில் தனது உயிரினைத்தானே அழித்து இந்த தேர்வு முறைக்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் ரீதியாகப் போராட வேண்டிய விடயம் ஒன்று தொடர்பாகத் தனது உயிரினை மாய்த்துக் கொள்ளும் முடிவினை அனிதா எடுத்துக் கொண்டது ஒரு துர்ப்பாக்கியமான விடயமே.

இருந்தும் விரக்தியால் அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டார் என நாம் இவ் விடயத்தைச் சுருக்கி விட முடியாது.

புதிய தேர்வு முறையால் தனது கல்வி வாய்ப்புப் பறிக்கப்பட்ட நிலையில் தனது மரணத்தின் ஊடாக இவ் விடயத்தினை ஏனைய மாணவர்களின் நன்மை கருதிய ஓர் அரசியற் பிரச்சினையாக மாற்ற அனிதா முற்பட்டிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.

சமத்துவ வாய்ப்பற்ற ஒரு கல்விச் சூழலில் தேர்வுகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் என்பவை அரசியல் ரீதியாக மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியவை.

மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிக ஆழமாகப் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட வேண்டியவை. வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருந்து போராடிக் கல்வியின் ஊடாக முன்னேற்றத்தை அடையத் துடிக்கும் அனிதா போன்ற மாணவரின் கல்வி வாய்ப்பு பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைவரதும் தலையாய கடமையாகும்.

மாணவி அனிதா முன்வைத்த நீட் தேர்வுமுறை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் நாட்டில் மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேர்வு முறை குறித்து தமிழ்நாட்டு மாணவர்களும், மக்களும் வெளிப்படுத்தும் எதிர்ப்பினை சமூக நீதியின் அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் எதிர்ப்பாகவே நாம் நோக்குகிறோம்.

தமிழ்நாடு வாழ் மாணவர்களின் போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவினை வெளிப்படுத்துவதுடன் இப் போராட்டம் வெற்றியடைவதற்கான எமது வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அனிதாவின் கோரிக்கைக்குக் கிடைக்கும் வெற்றி ஏதோ ஒரு வகையில் அவரது மரணத்துக்கு நீதி வழங்குவதாக அமையும் எனவும் கருதுகிறோம்.

தனது கல்வி உரிமைக்காகப் போராடிய அனிதாவின் நினைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவரது பெயரில் புலமைப்பரிசில், திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது என்பதனை நாம் இந்த தருணத்தில் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

இத்திட்டம் குறித்த விரிவான விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும். அனிதாவின் உயிர்த்தியாகத்திற்கு வணக்கம் செலுத்தும் அதேவேளை கல்வி உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் எவரும் தமது உயிரினை மாய்த்துப் போராடும் முடிவினை எடுத்துக் கொள்வதனைத் தவிர்க்குமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.