ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் Namur நகரத்தில் இருந்து ஆரம்பித்து Nassogne எனும் நகரத்தில் மாலை நேரம்
நிறைவடைந்துள்ளது.
இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஈருருளிப் பயணத்தின் போது ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஆலோசனை சபையின் அங்கத்துவ நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளுடனும் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளன.
இந்த ஈருருளிப் பயணதில் டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளை சார்ந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை நாளைய தினம் மனிதநேய ஈருருளிப் பயணம் லக்சம்புர்க் நாட்டை ஊடறுத்து செல்லவுள்ளதுடன், மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் நாட்களில் லக்சம்பேர்க், ஜேர்மனி, பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனீவா மாநகரை சென்றடையவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடலொன்றை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
மேலும், பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மனிதநேய ஈருருளிப் பயணம் ஐ.நா நோக்கி செல்கின்றது.
1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழின படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. ஈழத் தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும்.
3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்க வேண்டும்.
4. கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும்.