கூடவே இருந்து குழி பறித்த இலங்கை நண்பனை காப்பாற்றுவதற்காக பொலிஸ் நிலையத்தில் ஜெர்மனியர் ஒருவர் கண்ணீர் மல்கியுள்ளார். சுமார் இருபது லட்சம் ரூபா பெறுமதியான 500 யூரோ பெறுமதியான 16 நாணயத்தாள்களைக் காணவில்லை என ஜெர்மனியர் அளுத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் 27 வயதான இலங்கையர் ஒருவரை கைது செய்துள்ளனர். களவாடப்பட்ட பணத்தில் ஆறு லட்சம் ரூபாவும் இந்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
தமது பணத்தைக் களவாடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிந்து கொண்ட ஜெர்மனியர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். பொலிஸ் நிலையத்திற்கு சென்று பார்த்த போது பணத்தை களவாடிய நபர் தனது நெருங்கிய நண்பர் என்பதனை அறிந்து கொண்டுள்ளார்.
களவாடப்பட்ட பணம் தேவையில்லை, பொலிஸ் விசாரணைகளை நிறுத்துங்கள் எனது நண்பரை விடுதலை செய்யுங்கள் என குறித்த ஜெர்மனியர் அளுத்கம பொலிஸாரிடம் நேற்று கோரியுள்ளார்.
அளுத்கம பிரதேசத்தில் ஒர் சுற்றுலா விடுதியொன்றும் இந்த ஜெர்மனியருக்கு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னதாக 27 வயதான இலங்கையருக்கும், ஜெர்மனியருக்கும் இடையில் நட்பு உருவாகியுள்ளதாகவும் இருவருக்கும் இடையில் மிக நெருங்கிய பிணைப்பு உண்டு எனவும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெர்மனிய பிரஜை இலங்கைக்கு பயணம் செய்யும் போது இலங்கையர் அவருடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளுக்கு பயணிப்பதாகவும், ஜெர்மனிய பிரஜை இந்த இலங்கையரை பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஒரு ஆண்டுக்கு முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரினால் களவாடப்பட்ட பணத்தின் எஞ்சிய 14 லட்சம் ரூபாவிற்கு என்னவாயிற்று என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
எனினும் நண்பனை விடுதலை செய்யுமாறு ஜெர்மனியர் பொலிஸாரிடம் கண்ணீர் மல்க கோருவதாகத் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.