புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை நேரில் சந்திக்கவுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
புதிய அரசமைப்புக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி தூக்கியிருந்தனர். அரசமைப்பு மறுசீரமைப்பே வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
அதனையடுத்து அவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் அழைத்துப் பேச்சு நடத்தியிருந்தார். புதிய அரசமைப்பின் அவசியத்தை மகாநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்த அறிக்கையுடன் சிங்கள – பௌத்த மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழும் மகாநாயக்க தேரர்களை பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சந்திக்கவுள்ளார்.
இதன்போது இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாகவே நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும், போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களும் புதிய அரசமைப்புக்கு பூரண ஆதரவை வழங்குகின்றார்கள் என்பதையும் மகாநாயக்க தேரர்களிடம் சம்பந்தன் எடுத்துரைக்கவுள்ளார்.
அதேவேளை, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்களையும் சம்பந்தன் நேரில் சந்தித்து இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக இதுவரை செயற்பட்ட அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு, சுமார் எழுபதுக்கும் அதிகமான தடவைகள் கூடித் தயாரித்த இடைக்கால அறிக்கை, நீண்ட இழுபறிக்குப் பின்னர் முழு அளவில் இறுதி செய்யப்பட்டு, குழுவின் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை அங்கீகரிக்கப்பட்டு விட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த மாதம் 21ஆம் திகதி காலை நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாகக் கூடும் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிப்பார். அங்கிருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
இந்த இடைக்கால அறிக்கை மீதான விவாதம் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.