புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சுவிஸ்குமார் விடுவிக்கப்பட்டதற்கு துணையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் அலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நேர்மையான பொலிஸ் அத்தியட்சகர். அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அவரே இருக்கிறார் என சுட்டிக்காட்டிய அவர் அந்தப் பதவிக்கு அவரை நியமிக்காமல் இருப்பதற்காகவே அவர்மீது திட்டமிட்டு சந்தேகத்தை ஏற்படுத்தி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்குவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களமும், சட்டமா அதிபர் திணைக்களமும் தடையாக இருப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் சேவைக்காலத்தில் அவரது நேர்மைத்தன்மையை கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
வித்தியா படுகொலை சம்பவத்தில் பாரிய மர்மம் இருக்கின்றது. இது குறித்த விசாரணைகள் சரியான முறையில் இடம்பெறும் என உறுதியாக கூறமுடியாது என தெரிவித்த அவர் வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஜ்குமாரை விடுவிப்பதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் யார்? மற்றும் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதி அறிந்து வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.