ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேனவுக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொலநறுவையில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமாக இருந்த லால் சிறிசேன தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலநறுவை – ஹிங்குராகொட வீதியில் லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டர் சைக்களில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
விபத்தின் பின்னர் லால் சிறிசேன அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில் நேற்று மாலை பொலிஸாரிடம் அவர் சரணடைந்தார்.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கியுள்ளார்.
“என்ன என்னிடம் கேட்கின்றீர்கள்”தராதரம் பாராமல் சட்டத்தை செயற்படுத்துங்கள் என ஜனாதிபதி பொலிஸ் அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அவரை பொலநறுவை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.