மியான்மரில் ரோகிங்யா போராளிகள் ஒரு மாதம் போர்நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர்.
மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டு அரசு பாரபட்சம் காட்டுகிறது.
அவர்கள் மியான்மரின் பூர்விக குடிமக்கள் என்று ஒரு தரப்பினரும், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர்.
மியான்மரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தபோதும், அவர்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படவில்லை.
மாறாக அவர்கள் மீது புத்த மதத்தை சேர்ந்த மக்களே வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இந்நிலையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களை பாதுகாப்பதாக “தி அரக்கான் ரோஹிங்யா சால்வேஷன் ஆர்மி” என்ற போராளிகள் குழு தொடங்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி போராளிகள் குழு பிராந்தியத்தில் இருந்த சுமார் 30 ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து பாதுகாப்பு படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. இதில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் மியான்மரில் இருந்து வங்காளதேசம் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இந்த நிலையில் ராணுவத்துடன் போரிட்டு வரும் ரோகிங்யா போராளிகள் ஒரு மாதம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளனர்.