பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் 5வது நாளாக இன்றும் பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.
பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் விசேட அறிக்கையொன்றை வழங்க நான்கு நாட்களாக குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியிருந்தார்.
இந்நிலையில் நேற்று சுமார் 6 மணித்தியாலங்களுக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நிறைவு செய்திருந்தது. நேற்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியிருந்த அர்ஜூன் அலோசியசிடம் பிற்பகல் 5 மணியளவில் நேற்றைய நாளுக்கான விசாரணைகள் நிறைவடைந்திருந்தது.
அர்ஜூன் அலோசியஸிடம் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை பதிவுச்செய்யவுள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையும் இன்று ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அர்ஜூன் அலோசியஸிடம் நான்கு நாட்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். பேப்பச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸை மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஆணைக்குழு சாட்சியமளிக்க அழைத்தமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டவரைபு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அலோசியஸின் சட்டத்தரணி அர்ஜூன் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜூன் அலோசியஸ் இன்று சாட்சியமளிப்பதற்கு முன்னர் சத்திய கடதாசி ஒன்றை வழங்கவேண்டும் என்றும் ஆணைக்குழு நேற்று முன்தினம் உத்தரவிட்டமையே குறித்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் ஆணைக்குழு தமது உத்தரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அலோசியஸ் இன்று சாட்சியம் வழங்கும்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும் அவர் சார்பில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி கலந்துரையாடல்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் நிலைப்பாடு தொடர்பாக விசாரணைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் குரல் பதிவுகளின் அடையாளங்கள் தொடர்பில் அவர் விளக்கமளித்திருப்பதாக தெரியவருகின்றது.
ஏற்கனவே பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் சார்பாக முன்லையாகியிருந்த சட்டத்தரணியும் அர்ஜூன் அலோசியஸ் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணியும் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டேன் என தெரிவித்துள்ள நிலையில் நேற்றும் அர்ஜூன் அலோசியசுடனான விசாரணைகளின்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன விசாரணைகளுக்கு ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, தற்போதைய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.