வடக்கு கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் மூலம் போதைப்பொருள் பாவனையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் ஊக்குவித்ததாக சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாடசாலைகளுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் இராணுவத்தினரினால் போதைப்பொருட்கள் மாணவர்களுக்கு விற்பனை செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார இராஜாங்க அமைச்சினூடாக ஸ்ரீலங்காவிற்கான சீனா தூதரகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கிராமத்திலுள்ள 6 பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு களுதாவளை மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது ஸ்ரீலங்காவிற்கான சீனா தூதரகத்தின் பிரதி தூதுவர் சாங் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக போராடிய பலர் தற்போது மடிந்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினூடாக சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்..