சன் சீ கப்பல் விவகாரம் – இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

mvகனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு சுமார் 500 இலங்கைத் தமிழ் அகதிகள் சரக்குக் கப்பல் ஒன்றில், ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு கனடாவுக்கு அழைத்து வந்தார் என்று இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனினும், இந்த வழக்கு நடந்த ஏழு ஆண்டுகளாக, குணரொபின்சன் கிறிஸ்துராஜா சிறையில் இருந்தார் என்பதால், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை நீதிபதி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

கிறிஸ்துராஜாவும் தன்னை இந்தக் கப்பலில் வந்த அடைக்கலம் கோருபவராகவே வெளிப்படுத்தியுள்ளார். இவர் கப்பலின் தலைவரோ அல்லது இந்தப் பயணத்துக்கு மூளையாகச் செயற்பட்டவரோ அல்ல. இவரது குடும்பத்தினரும், ஏனையவர்களைப் போலத் தான் பயணித்துள்ளனர் என்றும் நீதிபதி கதரின் வெட்ஜ் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்வி சன் சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வன்கூவரைச் சென்றடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.