தாயிற் சிறந்த கோவில் இல்லை என்பதும் தாயைப்போல ஒரு தெய்வமுமில்லை என்பதும் நம் தமிழ்வழி வந்த பொன்மொழிகளாகும்.
தாய் என்பவள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் அடிப்படையான ஒரு மூலசக்தியாவாள். அவ்வாறான தாயை நாம் எமது கண்ணுக்கும் நிகராக வைத்துப் பார்க்கவேண்டும்.
எந்தவொரு தாயுமே தனது பிள்ளையின் குண நலம் பார்த்து தனது அன்பினைச் சொரிவதில்லை. காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பார்கள்.
காலையில் எழுந்து சாப்பாடு செய்வதிலிருந்து நாம் தூங்கப்போகும்வரை அம்மாவின் உழைப்பு என்பது பொன்னேடுகளில் பொறிக்கப்படவேண்டியது.
அம்மா எமக்காக செய்கின்ற பல தியாகங்களின் மத்தியில் இன்று நாம் பார்க்கவிருக்கும் விடயம் தான் ’அம்மாவின் சமயல்’.
அம்மாவின் கையால் சமைத்த உணவை உண்பவர்கள் அதிக பேறுபெற்றவர்களே. காரணம், பிள்ளைகளுக்காக சமைக்கும் அம்மா, அந்தச் சமையலின் ஒவ்வொன்றிலும் மிக மிக கவனமாக இருப்பாள்.
அசுத்தமான எந்தவொரு உணவுப் பதார்த்தங்களுக்கும் அம்மாவின் சமையலறையில் இடமிருக்காது, நச்சுக் கலப்படமான காய்கறிகளும் நாறிப்போன மச்ச மாமிசங்களும் அம்மாவினால் உடனடியாகவே நிராகரிக்கப்பட்டுவிடும்.
இவை எல்லாம் ஏன் சொல்கிறோமெனில், இன்றைய அவசரமான உலக வாழ்க்கையிலே அம்மாவின் உணவை வெறுத்து ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் விதவிதமான உணவுகளை ருசி பார்க்கும் இளைய சமுதாயத்தினைக் கண்டுவருகிறோம். ஹோட்டல்களிலும் உணவகங்களிலும் அம்மாவின் கவனத்தில் பாதியளவும் இருக்கப்போவதில்லை. அதற்கான நேரமும் தேவையும் ஹோட்டல் சமையல்காரர்களிடம் இருப்பதில்லை.
ஏன் அம்மாவின் சாப்பாட்டை வெறுக்கக்கூடாது?
இந்த உலகிலே அம்மாவை இழந்து ஏங்கும் ஏராளமான மனிதர்கள் வாழ்கிறார்கள்; ஒருமுறையேனும் அம்மாவின் கையால் சமைத்த உணவை உண்ணமுடியாதா என்று ஏங்கும் பலர் இருக்கிறார்கள்; அதைவிட சாப்பாட்டுக்கே வழி இல்லாத இன்னும் பலர் தினம்தினம் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலருக்கு அம்மாவும் இல்லை சிலருக்கு சாப்பாடும் இல்லை எனும் நிலையில் அம்மாவையும் போதிய சாப்பாட்டையும் பெற்றிருக்கும் நாம் எமது அதிஸ்டத்தினை நினைத்துப் பேருவகை கொள்ளவேண்டுமேதவிர அம்மாவின் சாப்பாட்டை வெறுப்பதையே பாவமாகக் கருதவேண்டும்.