உள்ளூராட்சி மன்ற தேர்தல் இவ்வருடம் நடத்தப்படமாட்டாது. ஜனவரி மாதத்திலேயே தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறும் வரை மாகாண சபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது எனவும் ஒரு வேளை குறித்த சட்டமூலம் நிறைவேறாத பட்சத்தில் ஒக்டோபர் மாதம் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தற்போது சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தேர்தல் நடத்த கூடிய காலமான டிசம்பர் மாதத்தில் வரும் சனிக்கிழமையை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதனால் க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலங்களில் தேர்தல் நடத்த முடியாது.
ஆகையினால் திகதி குறித்து சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம்.
பெரும்பாலும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன. ஜனவரி மாதத்தில் வரும் சனிக்கிழமை தினங்களான 6 ஆம் திகதி அல்லது 21 ஆம் திகதிகளை தேர்தலுக்காக ஒதுக்க முடியும்.
மேலும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறை வேறும் வரை மாகாண சபை தேர் தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது. ஒருவேளை குறித்த சட்டம் நிறைவேறாத பட்சத்தில் ஒக்டோபர் மாதம் தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்படும்.
தற்போது அரசியல் கட்சிகளின் சுயலாபம் காரணமாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தேசிய தேர்தல்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை இடைத்தேர்தலாக நடத்த வேண்டியவையாகும். எவ்வாறாயினும் அரசியலமைப் பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறும் பட்சத்தில் 2018 அல்லது 2019 ஆம் ஆண்டுகளில் தேர்தல் நடத்த முடியும் என்றார்.