புதிய அரசியலமைப்பிற்கான இடைக்கால அறிக்கை குறித்தான இறுதி தீர்மானம் எடுப்பதற்கு அரசியலமைப்பு தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழு அடுத்த வாரம் கூடவுள்ளது. இதன்பிரகாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிணங்க ஏற்கனவே அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உப குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் அரசியல்கட்சிகளுக்கிடையில் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்ற வண்ணமுள்ளன.
குறிப்பாக வழிநடத்தல் குழுவின் கீழ் இயங்கும் உப குழுவின் அறிக்கையின் ஊடாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆளுநரின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெற்கை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்ட வண்ணமுள்ளன.
அத்துடன் இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். உப குழுவின் அறிக்கையின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்புக்கு கட்டாயம் செல்ல வேண்டி ஏற்படும்.
அரசியலமைப்பின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தொடர்ந்தும் குறித்த செயற்திட்டம் தாமதம் செய்யப்பட்டு வந்தது. செப்டெம்பர் மாதமளவில் வழிநடத்தல் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
இதன்பிரகாரம் சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெரும்பலான கட்சிகள் இடைக்கால அறிக்கைக்கான யோசனைகளை கையளித்துள்ள நிலையில் இறுதியான தீர்மானம் எடுக்கும் நோக்கில் அரசியலமைப்பு வழிநடத்தல் குழு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.
இதனையடுத்து வழிநடத்தல் குழுவின் இறுதி தீர்மானம் எடுக்கும் பட்சத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.