மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று நகருக்கான புகையிரத இணைப்பு பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு பிரயாணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பிற்பகல் 2.45க்கு வரும் உதயதேவி புகையிரத பயணிகள் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கல்முனை ஊடாக அக்கரைப்பற்று செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
இந்த பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கொழும்பிலிருந்து வரும் நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பிரயாணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் பெண்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மாலை 7.15க்கு புறப்படும் புகையிரதம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 3.55 மணிக்கு வரும் பாடுமீன் கடுகதி புகையிரதத்தில் வரும் பிரயாணிகளின் வசதி கருதி அம்பாறை நகருக்கு செல்வதற்கு ஈடுபடுத்தப்பட்ட பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இரு பஸ் சேவைகளையும் பிரயாணிகளின் நன்மை கருதி மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.