தனுஷ்கோடி, மக்கள் வாழத் தகுதியற்ற இடமா என்பதை ஆய்வுசெய்ய இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனுஷ்கோடிக்குச் செல்கின்றனர்.
தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப் புயலில் ஆட்டம் கண்டுபோனது. அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி நகரமும் அதன் சுற்றுப்புறக் கடற்கரையும் பெருங்கோவ புயலுக்கு இரையாகின. தென்னகத்து துறைமுக நகரங்களில் புயலுக்கு முந்தையத் தனுஷ்கோடிக்கு தனி இடமுண்டு.
வணிக ரீதியில் முக்கிய நகரமான தனுஷ்கோடி 1964 புயலுக்கு முன்பு ஐந்நூறு குடும்பங்களுக்கு மேல் வசித்தக் குடியிருப்புப் பகுதியாகவும் இருந்தது.
பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என நகரின் பாதிக்குமேல் கடல் விழுங்கி விட, எஞ்சியிருக்கும் ‘கட்டடக் கூடுகள்’ உடன் தொலைந்த நகரமாகவே இன்று காட்சியளிக்கிறது தனுஷ்கோடி.
53 ஆண்டாக ராமேஸ்வரம் தீவில் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவே தனுஷ்கோடியும் அரிச்சல் முனைப் பகுதியும் இருந்தன. முகுந்தராயர் சமுத்திரம் வரை மட்டுமே சாலை வசதி இருந்த நிலையில், கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது.
சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தனுஷ்கோடி நகரம் மக்கள் வாழத் தகுதியானதா இல்லையா என்பது குறித்து ஆய்வுசெய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் வருகிற செப்டம்பர் 17-ம் தேதி தனுஷ்கோடிக்குச் செல்ல உள்ளனர்.