பொலன்னறுவை – கவுடுல்ல, மிரிஸ்ஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதியின் மடியில் இருந்து விளையாடிய சிறுமி தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்தன.
மெதிரிய பிரதேசத்தை சேர்ந்த தனுல்யா என்ற சிறுமி ஜனாதிபதியை கண்டவுடன் அவரிடம் ஓடி செல்ல முயற்சித்துள்ளார். எனினும் பாதுகாப்பு பிரிவினர் சிறுமியை தடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி உடனடியாக அந்த சிறுமிக்கு இடமளிக்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் ஜனாதிபதியின் மடியில் அமர்ந்து கொண்ட சிறுமி நிகழ்வு நிறைவடையும் வரை ஜனாதிபதியுடன் மேடையில் விளையாடியதுடன், மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பிரபலங்களுடனும் விளையாடி உள்ளார்.
நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேன சாதாரணமான, எளிமையான ஒருவர் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
ஏழை மக்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என அனைவரிடமும் அன்பாகவும், அக்கரையுடனும் அவர்களிடம் கலந்துரையாடுவதை பல சந்தர்ப்பங்களில் காணமுடிந்தது.
அந்த வகையில், ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் ஒரு குழந்தையுடன் மேடையில் விளையாடுவது தொடர்பில் அதிகம் பேசப்படுவதுடன், இது தொடர்பிலான புகைப்படங்களும், காணொளிகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வரான தஹாம் சிறிசேன தனது முகப்புத்தகத்தில் பாடல் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதில் ஜனாதிபதியிடம் அந்த குட்டிப் பெண் விளையாடுவதையும், ஜனாதிபதியின் ஏனைய பணிகள் குறித்தும் அந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.