சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகனப்பேரணி நாளை வெள்ளிக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி கொழும்பு நகருக்கு வரவேண்டாம் என என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
சைட்டம் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல்மாவட்ட ரீதியிலான வேலை நிறுத்தப்போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.
இதுமாவட்ட ரீதியாக கட்டம் கட்டமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதுமாத்திரமல்லாது இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சமாந்தரமாக பல்வேறு நகரங்களிலிருந்தும் கொழும்பு நோக்கிய சைட்டம் எதிர்ப்பு வாகனப்பேரணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களிலிருந்து செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வாகனப்பேரணிகளானது நாளை வெள்ளிக்கிழமை கொழும்மை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.