சமீபத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணம் உலகெங்கும் காலநிலையில் தாக்கத்தைத் தோற்றுவித்துள்ளதாக ஸ்ரீலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானியலாளர் அனுர சீ பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதனால் இலங்கையிலும் சீரற்ற கால நிலை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை பொழியும் எனவும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றிரவு நாட்டின் பல பகுதிகளுலும் மழை பெய்திருந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலுவான காற்று நிலை காணப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்காவின் குக்குலே கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், தாழ் நில பகுதியில் வாழும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.