உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவிகளை வழங்குவதில் ஆர்வங்காட்ட அரசு தயங்குகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கைக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவது தொடர்பிலும், பொருளாதார விவகாரங்களை ஆராய்வதற்காகவும் பிரசல்ஸிலிருந்து கொழும்புக்கு வந்த குழுவினரே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இலங்கை வந்துள்ள மேற்படி குழு, ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை பற்றியும், அதை மீளப்பெறுவதற்காக இலங்கை இன்னும் என்ன செய்யவேண்டும் என்பதை விவரிக்கும் வகையிலான அறிக்கையொன்றை நேற்று பிரதமரிடம் கையளித்தது.
இதன்போது கருத்து வெளியிட்ட இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்லாய் மார்கோ இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை கடந்த இரண்டரை வருடங்களாக பொருளாதார அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சியை வெளிக்காட்டியுள்ளது.
ஆனாலும், சமூக அபிவிருத்தி குறிகாட்டிகளில் இதேபோன்றதொரு வளர்ச்சிகளை வெளிக்காட்டியுள்ளதா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தளவு தூரம் உதவியுள்ளது என்பது தொடர்பிலும், நல்லிணக்கம் மற்றும் தேசிய கொள்கை உருவாக்கத்தில் காட்டிய ஆர்வம் தொடர்பிலும் சந்தேகம் நிலவுகின்றது.
காணி விடுவிப்பு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல், போர்க்குற்றம் இடம்பெற்றதா என்பது தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோருதல் போன்ற விடயங்களில் எவ்விதமான ஆர்வத்தையும் இலங்கை அரசு வெளிக்காட்டத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.