விடுதலைப்புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வடபிராந்திய பேருந்து உரிமையாளர்கள் கொழுத்த லாபமீட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் எரிபொருள் விலை காரணமாக பேருந்து உரிமையாளர்களின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனினும் வடமத்திய மற்றும் வடமாகாணத்தில் அநுராதபுரம் – மதவாச்சி மட்டுமன்றி யாழ்ப்பாணம்-கொழும்பு போன்று குறுகிய மற்றும் நீண்டதூர சேவைகளில் ஈடுபடுத்தப்படும் பேருந்து உரிமையாளர்கள் கொழுத்த லாபம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக டீசலைப் பயன்படுத்தி ஓடும் பேருந்துகளை மண்ணெண்ணெய் கொண்டு இயக்குவதே இவர்கள் லாபம் பெறும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வடபகுதிக்கான பொருட்கள் தடை நிலவிய காலப்பகுதியில் இவ்வாறான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே விடுதலைப் புலிகள் தங்கள் வாகனங்களை பயன்படுத்தி இருந்தார்கள்.
தற்போது அதே தொழில்நுட்பத்தில் பஸ் ஒன்றை இயக்கும் வகையில் அதன் என்ஜினில் மாற்றங்களைச் செய்வதற்கு 3500 ரூபா மட்டுமே செலவாகின்றதாக தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் காரணமாக தற்போது பேருந்து உரிமையாளர்கள் பெரும் லாபமீட்டத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.