இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 10 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள தடவியல் சோதனைக்கு பின்னர், இது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க காவற்துறையினர் தொடங்கியுள்ளனர்.
சண்டிகரை சேர்ந்த 10 வயது சிறுமியை, அவரது மாமா பலமுறை பலாத்காரம் செய்த காரணத்தால் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
தான் கருவுற்றிருப்பது கூட தெரியாத சிறுமி இருந்திருந்துள்ளார், இதனை அறிந்த பெற்றோர் கருவை கலைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை, இந்நிலையில் சிறுமிக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்துள்ளது. இதில் குழந்தையின் டிஎன்ஏ, குற்றவாளியின் டிஎன்ஏவுடன் பொருத்தவில்லை என சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.
குற்றவாளி தற்போது சிறையில் இருக்கிறார், நான் தான் இந்த தவறை செய்தேன் என அவர் தனது தரப்பில் ஒத்துக்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிறுமியும் காணொளி மூலம் தனது மாமாவின் பெயரை சொல்லி, அவர்தான் இவ்வாறு செய்தார் என்று நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களில் பலமுறை தன்னுடைய மாமா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இந்த சிறுமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
40 வயதுகளில் இருக்கின்ற குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளும் சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சிறையில் இருக்கின்ற இவர் இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த சிறுமி பெற்றெடுத்த குழந்தையின் டிஎன்ஏ மாதிரி, குற்றம் சாட்டப்பட்டவரோடு பொருந்தாததால், இந்த சிறுமி பிறரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன் மீதான குற்றங்களை மறுக்கவில்லை என்று இந்த சிறுமியின் தந்தை முன்னதாக தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமியின் மாமா குற்றஞ்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார் என்று காவற்துறை கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதுவரை வேறு எந்த சாத்தியக்கூற்றையும் யாரும் எண்ணவில்லை. இந்த சிறுமி காணொளி உரையாடல் மூலம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அதில், தன்னுடைய மாமாவை தெளிவாக பெயர் சொல்லி தெரிவித்திருக்கிற இந்த சிறுமி, தன் மீது நடத்தப்பட்ட துஷ்பிரயோக உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்” என்று இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்,
தாங்கள் வேறு யாரையும் சந்தேகப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் இந்த வழக்கை விசாரிப்போரிடம் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த வழக்கு மிக வினோதமான திருப்பத்தை சந்தித்திருக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.