அண்மைய ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் இடம்பறும் தீவிரவாத தாக்குதல்களில் லண்டன் அதிகமாக இலக்கு வைக்கப்படுவதை பார்க்க கூடியதாக உள்ளது.
கடந்த 1970களில் ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடர்ச்சியாக தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுவது அண்மைய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
இதை செய்வது யார், மேலும் ஏதாவது வெடிபொருள்கள் உள்ளனவா, யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்ற கேள்விகளுக்கு பொலீசார் உடனடியாக விடை கண்டுபிடித்தாக வேண்டி சூழலில் இருக்கின்றார்கள்.
இலண்டனை பொறுத்தவரை போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வளவு இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட்டபோது பொலிசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இந்த தாக்குதல்கள் இடம்பெறும் பிண்ணணி என்ன என்ற கேள்வி உருவாகியுள்ளது.
நேற்று காலை(160917) லண்டனில் உள்ள சுரங்க ரயில் பாதையில், ரயிலில் இருந்த பக்கெட் குண்டு வெடித்ததில், 18 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் தலைநகர், லண்டனில், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்துக்கு நேற்று காலை, ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த குண்டு வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில், 18 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து லண்டன் பொலீசார் பயங்கரவாத சம்பவமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த சம்பவத்துக்கு, பிரிட்டன் பிரதமர், தெரசா மே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இக்குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை கடந்த (மே 23 2017) அன்று லண்டன் மான்செஸ்டர் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 பேர் பலியாகினர்.
50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இசை நிகழ்ச்சியின் போது குறித்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதேவேளை( 2005 ஜுலை 7 ) அன்று லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
லண்டன் சுரங்க ரயில் வண்டிகளில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்புகளின் பின்னர் இது தொடர்பாக பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
லண்டனில் உள்ள பொதுப் போக்குவரத்து அனைத்திலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில், அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற 5 ஆவது தீவரவாத தாக்குதல் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்பு நடைபெற்ற நான்கு சம்பவங்களில் 36 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்தான் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.