அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்தும் ஜோஸ்

ஹார்வி சூறாவளியின் தாக்கத்தில் இருந்து அமெரிக்கா இன்னும் மீளாத நிலையில், ‘ஜோஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள மற்றொரு சூறாவளி அமெரிக்காவின் ஏனைய சில பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரியவருகிறது.

28242

“அமெரிக்காவுக்கு தென்கிழக்கில், அத்திலாந்திக் சமுத்திரத்தில் சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் ஜோஸ் புயலின் வேகம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

தற்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல். அதன் நகர்வு அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தை நோக்கியே அமைந்திருக்கிறது. இதே வேகமும், நகர்வும் தொடர்ந்தால், அடுத்த ஓரிரு நாட்களுக்குள் ஜோஸ் சூறாவளி அமெரிக்காவைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது” என்று அந்நாட்டின் தேசிய சூறாவளி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இச்சூறாவளி அமெரிக்காவைத் தாக்கினால், நியூ ஜேர்ஸி, லோங் ஐலண்ட், கனெக்ட்டிக்கட், மசாசூசெட்ஸ் மற்றும் ரோட் ஐலண்ட் ஆகிய பகுதிகளில் கணிசமான சேதத்தை விளைவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

எவ்வாறினெனினும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையால், நியூயோர்க் உட்பட அமெரிக்காவின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசவும், தொடர்மழை பொழியவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.