ஒரு தலைமுறையையே இலங்கைக் கிரிக்கெட் இழந்துவிட்டது என்று லசித் மலிங்க ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்களின் விருப்பத்திற்கு புதிய இளம் வீரர்களை அணியில் சேர்த்து, சேர்த்தவர்கள் நல்ல பெயரைப் பெற்றுக்கொண்டார்கள். அணி வீழ்ச்சியைக் கண்டுவிட்டது என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணி அண்மைக் காலமாக கண்டுவரும் தொடர் தோல்விகளால் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றது. அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கிரிக்கெட்டை மீட்டெடுப்பதற்கான விசேட செயலர்வை நடத்த விளையாட்டுத்துறை அமைச்சு முடிவுசெய்தது.
அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் கிரிக்கெட் மீட்டெக்கும் விசேட செயற்றிட்ட சம்மேளனம் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு வோர்ட்டஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கைக் கிரிக்கெட்டிலிருந்து ஒரு தலைமுறையையே நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதில் சிக்கக்கொண்டவர்கள்தான் ஜெஹான் முபாரக், திலின கண்டம்பே, மலிந்த வர்ணபுர, சாமர சில்வா, கௌஷால் வீரரத்ன போன்ற வீரர்கள். இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பலர் இருக்கிறார்கள்.
இப்படியொரு தலைமுறை தேசிய அணிக்கு வருவதற்கு கழக மட்டத்தில் 8 அல்லது 9 வருடங்கள் விளையாடியவர்கள்.
அப்படி பல போராட்டங்களுக்குப் பிறகு தேசிய அணிக்கு வந்து சர்வதேச அளவில் 2 வருடங்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு சில காரணங்களால் அவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் நாம் சரியான நடைமுறையை கையாளவில்லை. அவர்களின் திறமைகள் மங்கியதால் நீக்கப்பட்டார்கள் என்றால், அவர்களின் திறமை ஏன் குறைந்தது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப அவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை திறமையான வீரர்களாக உருவாக்கியிருக்கவேண்டும்.
அவர்களின் அனுபவத்தோடு பயிற்சியாளர்கள் அதை இலகுவாக செய்திருக்கலாம். ஆனால் அதை யாரும் செய்யவில்லை.
வெளியிலிருந்து வரும் கருத்துக்களுக்கும், மக்களின் கருத்துக்களுக்கும் செவிசாய்த்து இளையவர்களை அணிக்கு கொண்டுவந்து விளையாடவிட்டு தாங்கள் பிரகாசித்தார்களே தவிர இந்த வீரர்களை வளர்த்தெடுத்து அணியை பலப்படுத்த நினைக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.