சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.
கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “”மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது’’ என்பது பழமொழி.
இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் – குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.