சர்வதேச அழுத்தத்தின் மூலமே நீதி கிடைக்கும் – காணாமல் போனவர்களின் உறவுகள்

எமது பிள்ளைகள் உயிருடன் உள்ளார்கள் என்ற ஆதாரத்துடன் தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம் என தெரிவித்த காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் சர்வதேசத்தின் அழுத்தத்தின் ஊடாகவே இலங்கை அரசு எமக்கான நீதியை தரும் எனவும் சர்வதேச மன்னிப்பு சபையிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்பு சபையின் இலங்கைக்கான நிபுணர் ஜெலண்டா பொஸ்ரர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தனர்.

சர்வதேச அழுத்தத்தின் மூலமே  நீதி கிடைக்கும் - காணாமல் போனவர்களின் உறவுகள்

இவர்கள் வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் காணாமல் போனவர்களுடைய குடும்ப உறவினர்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக காணாமல் போனவர்களுடைய உறவினர்களையும் புத்தியீவிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்களை யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அதில் காணமல் பேனவர்களுiடைய உறவுகளின் பிரதிநிதிகளின் சந்திப்பின் போதே மேற்குறித்த விடயத்தினை முன்வைத்துள்ளனர்.

அவர்கள் சர்வதேச மன்னிப்பு சபையினரிடம் முன்வைத்த கோரிக்கைள் கருத்துக்கள் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
சர்வதேசத்தின் அழுத்தத்துடன் இலங்கை அரசு எமக்கான நீதியை தரும் என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்து எமது உறவுகளுக்காக போராடுகிறோம்.

இறுதியாக  ஜனாதிபதியால் எமக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அவர் வாக்குறுதி தந்து 3 மாத காலம் கடந்தும் எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை.

எமது பிள்ளைகள் இருக்கிறர்கள் என்ற ஆதாரத்துடன் தான் நாம் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

ஒரு நாளாவது   எமது பிள்ளைகளுடன் நாம் வாழ வேண்டும். அதற்கு இலங்கை அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் எமது எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ஜனாதிபதி எமக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் அவர்களால் தற்போது அமைக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை நம்புவதற்கு நாம் தயாராக இல்லை.

அதன் ஊடாக எமக்கு என்ன தீர்வு தரப்போகிறார்கள்? அதன் பயன் என்ன என்று எமக்கு சந்தேகமாக உள்ளது.

எமக்கு முழுமையான சர்வதேச விசாரணை வேண்டும் இலங்கை விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை.

காணாமல் போன அலுவலகத்தில் நம்பிக்கை கொள்வதற்கு ஏற்ற வகையில்  அந்த அலுவலகத்தில் பொறிமுறைகள் காணப்படவில்லை.

அதாவது நாம் போராட்டம் ஆரம்பித்து 200 நாட்களை கடந்த நிலையிலும் தொடர்ந்து தெருவோரத்தில் போராடி வருகிறோம்.

நாம் ஜனாதிபதியை சந்தித்த போது காணாமல் போனவர்களுடைய பெயர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

மறைமுக தடுப்பு முகாம்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.

அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

நிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை  ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தோம்.

ஆனால் அவர் எமக்கு காணாமல் போனோர் விடயத்தில்  அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

அதை நிறைவேற்றினால் நொந்து போயுள்ள எமது உள்ளங்களை வெல்லுவார். ஆனால் அதை அவர் செய்யவில்லை.சர்வதேசத்துக்கு இவ் விடயம் தொடர்பில் பொரிய பங்குள்ளது.

அடுத்து வரும்  ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மேலும்  கோரியிருந்தனர்.

அவர்களின் பிரச்சனைகள் கோரிக்கைகள் தற்போதைய நிலை தொடர்பாக ஆழமாக கேட்டறிந்த சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்த தடங்கலும் இருக்கப்போவதில்லை என தெரிவித்ததுடன்  உறவுகளுடைய நிலைப்பாடுகளை  சர்வதேச தலைமைகளுக்கும் இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.

மேலும் காணமல் போனவர்களுடைய விவகாரத்தை அவர்களின் உறவுகளின் நிலையினை சர்வதேச மயப்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வோம் என உறவினர்களிடம் உறுதியளித்து சென்றுள்ளனர்.

இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மாவட்ட காணாமல் போனவர்களுடைய உறவினர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.