புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயான விவகாரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரையும் யாழ்.மேல் நீதிமன்றுக்கு வருமாறு நீதிபதி இளஞ்செழியன் அச்சுவேலிப் பொலிஸார், கிராம சேவகர் ஊடாக தெரிவித்திருந்தார்.
இன்று காலை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற் குறித்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார்.
நீதிபதியின் இந்த உத்தரவுக்கு அமைய போராட்டத்தில் பங்கேற்றுள்ள 300 வரையான கிராம மக்கள் மன்றுக்கு வருகைத்தந்திருந்தனர்.
குறித்த மக்கள் அனைவருக்கும் முன்னிலையில் மீண்டும் பிற்பகல் 01 மணிக்கு குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் சடலங்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ்.மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிந்துசிட்டி மயானப் புனரமைப்புத் தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக புத்தூர் கலைமதி கிராம மக்கள் சார்பாக கலைமதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்குத் தொடுநர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி தம்பையா புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தை அண்மித்த பகுதியில் நான்கு மயானங்கள் அமைந்திருப்பதாக நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
அவரது கருத்தை கவனத்தில் கொள்வதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். மேலும், மயானத்தை அகற்றக் கோரி இதுவரை காலமும் அமைதியான முறையில் போராடிய மக்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த நீதிபதி சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மயானத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். அத்துடன் போராட்டத்தை கைவிடுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாயனங்களை அகற்றக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைச் சந்தித்த வடமாகாண முதலமைச்சர் மக்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்தார்.
பின்னர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மக்களின் உணர்வுகளை மதிப்பதாகத் தெரிவித்ததுடன், குறித்த பகுதியில் அமைந்திருக்கும் மயானம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளமையால் தாம் அரசியல் சார்ந்த முடிவுகளை உடனடியாக எடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.