அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரில் ஜார்ஜியா தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள கார்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் கையில் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் கத்தி மற்றும் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு சரணடையும்படி எச்சரித்தனர்.
ஆனால் அந்த வாலிபர் அதற்கு செவிசாய்க்கவில்லை. மாறாக அவர் ‘என்னை சுடுங்கள், என்னை சுடுங்கள்’ என்று சத்தம் போட்டுக்கொண்டே போலீசாரை நோக்கி முன்னேறி வந்தார். இதையடுத்து வேறுவழியின்றி போலீசார் அந்த வாலிபரை சுட்டு வீழ்த்தினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட அந்த வாலிபரின் பெயர் ஸ்கவுட் ஸல்ட்ஸ் (வயது 21) என்பதும், அவர் பொறியியல் மாணவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.