மாணவர்கள் பாடசாலை நேரத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் இது போன்ற நிலைமைகள் ஏற்படும் போது அதிபருக்கு கட்டுப்படுத்த முடியாமல் போனால், பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில்மா அதிபருக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் சில தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் குழுக்கள் பாடசாலையினுள் நுழைந்து கல்விச் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த நிலையில், பல்வேறு தரப்பினர்களால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது குறித்து தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும், அவ்வாறு தொடர்புடைய நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.