மலேசியாவில் இறந்த ஒருவரைப் புதைத்த இடத்தை விட்டு நகராமல் பூனை ஒன்று சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மலேசியாவில் இறந்துபோன இஸ்மாயில் மேட் என்பவரை அவரின் உறவினர்கள் கொண்டுபோய் அடக்கம் செய்துள்ளனர். அவர்கள் இறுதிச் சடங்கு செய்த நேரத்தில் வெள்ளை நிறப் பூனை ஒன்று அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளது.
மேலும் அவரைப் புதைத்த இடத்தை, அந்தப் பூனை தோண்ட முயற்சி செய்கிறது. அதைப் பெண் ஒருவர் தடுக்கிறார். அதையும் மீறி அந்தப் பூனை அந்த இடத்தைத் தோண்ட முயற்சி செய்கிறது.
இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கூறும்போது, இஸ்மாயில் பூனைகளின் மீது மிகுந்த அன்பாக இருப்பார். ஆனால், இது அவர் வளர்த்த பூனை அல்ல.
அவர் இந்தப் பகுதியிலுள்ள மசூதிக்கு அடிக்கடி வருவார். இது இங்கு சுற்றித் திரியும் பூனையாக இருக்கலாம்’ என்றனர். உறவினர்கள் அனைவரும் அங்கிருந்து சென்ற பின்பும் அந்தப் பூனை இஸ்மாயில் புதைக்கப்பட்ட இடத்தையே சுற்றிச் சுற்றி வந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த லண்டனைச் சேர்ந்த பூனை ஆய்வாளர் அனிடா கெல்சே, ‘பூனையின் இந்தச் செய்கை மிகவும் வித்தியாசமாகவுள்ளது. பொதுவாக நாய்கள் இதேபோன்று நடக்கும். எனக்கு இந்தப் பூனையின் செயல்பாடு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது’ என்று தெரிவித்தார்.
இஸ்மாயில் புதைக்கப்பட்டபோது பூனையின் செயல்பாட்டை வீடியோ எடுத்தவர் அதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட ஒருநாளில் அந்த வீடியோவை 70 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர். சுமார் 12,000 பேர் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.