நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியில் செண்பக நாச்சியார் அம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு நவ்வலடி, உவரி மற்றும் சுற்றுவட்டரா பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்வார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான நகைகள் அம்மன் பீடம் அருகே தரையில் பதிக்கப்பட்டிருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாலை கோவில் பூசாரி பூஜைகள் முடித்து விட்டு கோவில் கதவுகளை பூட்டி விட்டு சென்று விட்டார். நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் லாக்கரை உடைத்து அதில் இருந்த 83 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும்.
இன்று காலை வழக்கம் போல கோவிலுக்கு வந்த பூசாரி கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த அம்மனின் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து பூசாரி கோவில் நிர்வாகி செல்வகுமாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர் உவரி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.