இளைஞர்கள் விரும்பி வேலை பார்க்க ஆசைப்படும் பணியிடம் எது? மைக்ரோ சாஃப்ட்… கூகுள்… ரொம்ப யோசிக்க வேண்டாம். அமெரிக்காவில் இருந்தாலும் அது அரசுத்துறை நிறுவனம். நாசா என்று அழைக்கப்படும் National Aeronautics and Space Administration – நிறுவனத்தில் பணி புரியத்தான் உலக இளைஞர்கள் கால் கடுக்க காத்துக்கிடக்கிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கு முன், 12 விண்வெளி வீரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாசா அழைப்பு விடுத்தது. வந்த விண்ணங்கள் 18 ஆயிரம்.
நாசாவில் பணி புரிய ஆர்வம் காட்டுவதற்கு காரணமும் இருக்கிறது. அமெரிக்காவின் 18 அரசுத்துறைகளில் சிறப்பான பணியிடமாக கருதப்படுவது நாசா மட்டுமே. அமெரிக்க அரசுத் துறையில் நாசா சிறந்த பணியிடமாக 78.6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் Department of Commerce. Intelligence Community, Department of State துறைகள் வருகின்றன. ஆனால், நாசாவில் பணிக்கு விண்ணப்பிக்கவே ஒரு தகுதி வேண்டும். குறைந்தது ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டியிருந்தால்தான் விண்ணப்பிக்கவே முடியும்.
நாசாவில் அஸ்ட்ராநெட் ஆவதற்கு முன், நாசா என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். தமிழில் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் இதுவே. கடந்த 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது, சூரிய குடும்பத்தின் கோள்கள், சந்திரன் போன்றவற்றை ஆராய்வது , விண்வெளி வீரர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது இதன் முக்கியப்பணி.
விண்வெளியில் பறக்க முதலில் நீங்கள் அறிவியல், இன்ஜீனியரிங், தொழில்நுட்பம், கணக்கு என ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆயிரம் மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபமும் இருக்க வேண்டும். தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு, குழுவுடன் இணைந்து பணியாற்றுதல் முக்கியத் தகுதிகளாக கருதப்படும். விண்ணப்பிக்கப்பட்டவர்களில் இருந்து 120 பேர் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடக்கும். தொடர்ந்து கடினமான உடற்தகுதித் தேர்வும் நடைபெறும். இதில் தேர்வு பெறுவதும் முக்கியமானது.
உயரம் 5’2 ல் இருந்து 6’3 அடிக்குள் இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் இருக்கவே கூடாது. அமர்ந்த நிலையில் ரத்த அழுத்தம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். உடற்தகுதித்திறனையடுத்து தகுதித்திறன் தேர்வும் நடத்தப்படும். விண்வெளி பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.42 லட்சம் முதல் ரூ. 92 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி, திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதை பயிற்சி மற்றும் திறன்மதீப்பிடு காலம் என்கிறார்கள்.
நாசாவின் வயது முதிர்ந்த விண்வெளி வீரர் டொனால்ட் பெடிட் கூறுகையில், ”நான்கு வருட கல்லூரிப் பாடத்திட்டத்தை இரு வருடங்களிலேயே பெற்று விடலாம். புவிஈர்ப்பு இல்லாத இடங்களில் ஜெட் ஓட்டுவது, விண்வெளி உடை அணிந்து கொண்டு தண்ணீருக்குள் நீச்சல் அடிப்பது போன்ற கடினப்பயிற்சிகள் அளிக்கப்படும். கோடைகால விடுமுறை கிடையாது” என்கிறார்.
விண்வெளி உடை அணிந்து கொண்டு நீருக்கு அடியில் மிதக்கும் பயிற்சி, புவிஈர்ப்பு இல்லாத பகுதியில் ஒரேநாளில் 40 முறைக்கும் அதிகமாக ஜெட் விமானம் ஓட்டுதல் போன்ற கடின பயிற்சிகள் அளிக்கப்படும். ஒரு விண்வெளி வீரர் தரையில் ஆயிரம் பேர் ஒருங்கிணைந்து செய்யும் பணியை விண்வெளியில் மேற்கொள்வார் என்றால் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றி யூகித்துக் கொள்ளுங்கள்.
நாசாவில் பணிபுரிபவர்கள் கட்டாயம் ரஷ்ய மொழி கற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச விண்வெளி மையத்தில் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியது இருப்பதால் ரஷ்ய மொழிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. விண்வெளியில் உங்கள் பணி என்னவென்று நாசா தீர்மானித்த பின், அதற்கேற்ற வகையில் ஓராண்டுக்கு முன்னதாகவே தயார்படுத்தத் தொடங்குவார்கள்.
விண்வெளி வீரர்கள் ‘ஏரோஸ்பேஸ் ‘ நிறுவனங்களிடம் இருந்து பரிசு பெறுதல், நிதி ஆதாயம் பெறுதல் தடைசெய்யப்பட்ட விஷயம். விண்வெளி அனுபவங்களை புத்தகமாக எழுதி கூட ராயல்டி பெற முடியாது. தற்போது, நாசா புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. nasa.gov இணையத்தளத்தை திறந்தால் செவ்வாய் கிரகத்துக்குப் பறக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.