பிரான்ஸ் நாட்டில் வேட்டையாட சென்றபோது முதியவர் ஒருவர் தனது பேரனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை விலங்குகள் மற்றும் பறவைகளை பொதுமக்கள் வேட்டையாட சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்படுகிறது.
சில விதிமுறைகளின் அடிப்படையில் காட்டுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது கண்ணுக்கு தெரியும் எந்த விலங்கையும் வேட்டையாடலாம்.
இந்நிலையில், வுசயைணைந என்ற கிராமத்தில் வசித்து வரும் முதியவர் நேற்று முன் தினம் தனது 13 வயதான பேரனுடன் வேட்டைக்கு சென்றுள்ளார்.
முதியவர் பறவை ஒன்றை சுட்டு வீழ்த்தியதும் அது தரையில் விழுந்துள்ளது. பறவையை எடுப்பதற்காக பேரன் ஓடியுள்ளான்.
அப்போது, பேரன் மரங்களுக்கு பின்னால் இருந்து வருவதை அறியாத முதியவர் அவனை விலங்கு என தவறாக எண்ணி துப்பாக்கியால் தலையில் சுட்டுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பேரனை முதியவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
பேரனை தாத்தா துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் விலங்குகளை வேட்டையாடும் மாதம் தொடங்கியது முதல் ஒவ்வொரு ஆண்டும் பலர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.