நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி : ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்தவை சரியாக இருந்தாலும் பிழையாக இருந்தாலும், அவரே தமிழ் மக்களின் ஹீரோ என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தோ ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிங்கள மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஹீரோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

sasasasara5

தமிழ் மக்களுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் கடும்போக்கான கருத்துக்களை கூறி வரும் ஞானசாரர், கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்தப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், போரை வெற்றிகொண்ட மஹிந்த அரசாங்கம், தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறியுள்ளதென்றும், மஹிந்தவை சுற்றியிருந்தவர்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்கியிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காதெனவும் ஞானசாரர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேசிய ஒற்றுமையை பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத்தூபி அமைத்தாலும் அதில் தவறொன்றும் இல்லையென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உண்மையான விடுதலைப் புலிகள் வடக்கில் இல்லையென்றும், அவர்கள் வெளிநாட்டில் இருந்தே இலங்கையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.