பல்வேறு அலுவல்கள் நிமிர்த்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் சென்றுவந்த அன்றைய மக்கள் யாழ்தேவிமீது கொண்டிருந்த தீராத நம்பிக்கையை எஸ்.பொன்னுத்துரை எழுதிய ‘சடங்கு’ நாவலில் காணலாம். இன்றும் பல முதியோர்கள் தமது முகங்களையும் இந் நாவலில் தேடுவார்கள்.
யாழ்தேவி மற்றும் உத்தரதேவி இயந்திரங்கள் கனடாவால் வழங்கப்பட்டபின் 1956 ஏப்ரல் 23ஆம் திகதி தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி முப்பதாண்டுகளின்பின் தன்மீது பல தாக்குதல்கள் நிகழ்ந்து சிதைந்தபின்பும் ஓட்டத்தை நிறுத்தவில்லை.
கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்குமிடையில் 1985ஆம் ஆண்டு முதன்முறையாக நிலக்கண்ணியில் அகப்பட்ட யாழ்தேவியின் பெட்டிகள் தூக்கிவீசப்பட்டன. இதில் தெற்கிலிருந்து பயணித்த 50க்கும் மேற்பட்ட படையினர் பலியாகினர். பின்னர் 1986ஆம் ஆண்டு காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த உத்தரதேவி தொடரூந்து பரந்தனில் தாக்குதலுக்குள்ளானது. இதே ஆண்டின் இதே மாதத்தில் ஓமந்தைப் பகுதியில் மீண்டும் யாழ்தேவி தாக்குதலுக்குள்ளானது. 1987இல் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான பாதைகள் சேதமாக்கப்பட்டதன் பின்னும் பாதைகள் சீரமைத்து பயணத்தைத் தொடர்ந்தது. பின்னர் பாதுகாப்பின்மையால் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் திகதி காங்கேசன்துறை வரையிலான பயணத்தை நிறுத்திக்கொண்டது.
இவ்வாறு பல தாக்குதல்களை முகங்கொடுத்தும் தொடர்ந்தும் சேவையிலீடுபட முனைந்தமையானது வடபகுதி தொடரூந்து மார்க்கமே அதிக பணத்தினை அன்றைய அரசிற்கு சம்பாதித்துக் கொடுத்தது.
அதிக தூரத்தினையும் அதிக வருமானத்தினையும்கொண்ட வடபகுதி தொடரூந்து மார்க்கமானது அன்றைய மக்களால் என்றுமே மறக்கமுடியாதளவிற்கு கல்வி கலாசாரம் பொருளாதாரத்தொடர்புகளால் இறுக்கமான இடத்தினைப் பெற்றிருந்தது.
அன்று தொடரூந்தில் நீட்டிநிமிர்ந்து நித்திரையில் பிரயாணிக்கும் வடபகுதி தமிழர்களை அனுராதபுரத்தில் ஏறும் சிங்களவர்கள் “நகிட்டனவா நகிட்டனவா” என்று தட்டி எழுப்புவார்களாம். இதையே ‘சிரித்திரன்’ சுந்தரனாரின் ‘மகுடி’ கேள்வி பதிலில் “உறங்கிக்கிடந்த தமிழனைத் தட்டியெழுப்பியவர் யார்?” என்ற கேள்விக்கு “அனுராதபுரச் சிங்களவன்” என்று நாசூக்காக யாழ்தேவியோடு இணைத்துப் பதிலளித்தார். அதேபோல செங்கை ஆளியானின் ‘ஆச்சி பயணம் போகிறாள்’ என்ற நகைச்சுவை நவீனத்தில் தொடரூந்து ‘கன்டீன்’ பணியாளனொருவன் சிங்களத்தில் “மாத்தையா, மொனவத பொண்ட?” என்று கேட்கவும் “என்ன போண்டாவாமோ, அது வேண்டாம் சுசியம் இருந்தால் தரச்சொல்லு” என்று சிங்களம் தெரியாத ஆச்சி தன் மகன் செல்வராசாவுக்கு கூறும்போது சிரிப்பு பத்திக்கொண்டு வந்திடும்.
இவ்வாறான வ
ரலாற்றுச் சுவாரஸ்யங்களை எல்லாம் தன்னகத்தே கொண்ட யாழ்தேவியின் பழைய காணொளி ஒன்றினை இங்கே காணலாம்!