புதுடெல்லி:
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. இந்தாண்டிற்கான பத்மபூஷண் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனியின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
மகேந்திரசிங் டோனி இதுவரை 90 டெஸ்ட், 302 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை சர்வதேச போட்டிகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார்.
இந்திய அணியை பல தொடர்களில் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். குறிப்பாக 2007ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற அறிமுக டி20 உலககோப்பை போட்டியில் இளம் இந்திய அணி வெற்றிகரமாக கோப்பை வெல்ல வழிநடத்தினார். அதன்பின்னர் 2011ம் ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரில் இந்திய அணி டோனியின் தலைமையில் கோப்பையை வென்று சொந்த மண்ணில் உலகக்கோப்பை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.
2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் டோனி தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனைக்கு டோனி சொந்தக்காரரானார். 2014ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டெம்பிங் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதுவரையில் 331 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியதன் மூலம் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் டோனி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் அவர், இரண்டாம் இடத்தில் உள்ளார். அவர் தலைமையில் 199 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வாறு இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், அவரது பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் டோனியின் பெயரை மட்டும் தான் பத்ம விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.