அமெரிக்கா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஜ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகள், ஜெனீவா தீர்மானத்தை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் அறிய முடிகின்றது.
காணமல்போகச் செய்வதை தடுக்கும் சர்வதேச சமவாயச் சட்டத்தை இலங்கை அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என்றும் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட காணாமல் போவோரை கண்டறியும் அலுவலகத்தை உருவாக்கும் சட்டத்தின்படி, விரைவாக அந்த அலுவக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டதாகவும் அங்குள்ள இலங்கைச் செய்தியாளர்களை மேற்கோள்காட்டி எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த அமெரிக்க, பிரித்தானிய மற்றும் மேற்குலக நாடுகளின் சில இராஜதந்திரிகள் சீனாவுடன் இலங்கை மேற்கொண்டு வரும் உறவுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டதாகவும் மற்றுமொரு தகவலை மேற்கோள்காட்டி எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் சென்ற இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை இராஜதந்திரிகளுக்கும் இந்த விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது. சீனாவுடனான உறவு குறித்து இந்திய உயர் அதிகாரிகளே நேரடியாக கடும் அதிருப்தி வெளியிட்டதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை ஐ.நாவின் 72ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இலங்கையில் இருந்து செய்தியாளர்கள் பலர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.