அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தலை கண்டு தாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை என்றும் அவரது அச்சுறுத்தல்கள் நாய் குரைப்பதற்கு ஒப்பானது என வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் றி சூ-யொங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் ஆற்றிய காரசாரமான உரை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையில் நேற்று முன்தினம் முதல் உரை ஆற்றிய ட்ரம்ப், அமெரிக்காவோ அல்லது அதன் நட்பு நாடுகளோ வடகொரியாவின் தாக்குதலுக்கு இலக்காகுமாயின், வடகொரியா முற்றாக அழிக்கப்படும் என்றார்.
ட்ரம்பின் உரை குறித்து மேலும் தெரிவித்த வடகொரிய அமைச்சர், நாய் குரைப்பதன் மூலம் அணிவகுப்பு பேரணியை தடுக்க முடியாது என்ற ஒரு கூற்று உள்ளது. அது போன்று ட்ரம்பின் காரசாரமான பேச்சால் எம்மை அச்சுறுத்தவோ அடக்கவோ முடியாது எனக் குறிப்பிட்டார்.