முக்கியமான கண்டுபிடிப்பாளர்களைப் பற்றிக் கேட்டால் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் அல்லது லியோனார்டோ டா வின்சி என்ற பெயர்களை நீங்கள் பட்டியலிடலாம்.
ஆனால் மேரி ஆண்டர்சன் அல்லது ஆன் சுகுமோடோ பற்றி உங்களுக்கு தெரியுமா?
நீங்கள் அவர்களின் பெயர்களை அறிந்திருக்க மாட்டீர்கள், ஆனால் நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் பல பெண் கண்டுபிடிப்பாளர்களில் இவர்கள் இருவரும் உண்டு.
1. கணினி மென்பொருள் – கிரேஸ் ஹாப்பர்
இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க கடற்படையில் பணியமர்த்தப்பட்ட அட்மிரல் கிரேஸ் ஹாப்பர் ஒரு புதிய கணினியை வடிவமைக்குமாறு பணிக்கப்பட்டார். அவர் வடிவமைத்த கணினி மார்க் 1 என்று அழைக்கப்பட்டது.
1950 களில் கணினி நிரலாக்கத்தில் முன்னணியில் இருந்தவர் கிரேஸ் ஹாப்பர். கணினிகளில் புரட்சியை ஏற்படுத்திய நிரல்மொழி தொகுப்பியை (compiler) கண்டுபிடித்தவரும் இவரே. நாம் உள்ளிடும் குறிப்புகளை கணினிகள் புரிந்துக்கொள்ளும் குறியீடுகளாக மாற்றுவது ‘கம்பைலர்’. இதன் உதவியால்தான் கணினிகள் நாம் இடும் குறிப்புகளை புரிந்து கொண்டு விரைவாக நிரலாக்கம் செய்து வேலை செய்கின்றன.
பிழை நீக்கம் என்ற பொருள்தரும் “டி-பக்கிங்” என்ற சொல்லைப் பரவலாக்கியவர் ஹாப்பர். தனது கணினியிலிருந்து வைரஸ் ஊடுருவியதைக் கண்ட கிரேஸ், அவை நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார். இது இன்றும் கணினி நிரலர்களால் பயன்படுத்தப்படுகிறது.
“அற்புதமான கிரேஸ்” என்று அறியப்படும் கிரேஸ் ஹாப்பர், அமெரிக்கக் கடற்படையில் அதிக வயதுவரை பணியாற்றியவர் என்ற பெருமை பெற்றவர். 79-ஆவது வயதில் பணி ஓய்வு பெறும்வரை, கடற்படைக் கணினிகளில் பணிபுரிந்த பெருமை பெற்ற ஒரே பெண் கிரேஸ் ஹாப்பர்.
2. காலர் ஐடி மற்றும் கால் வெய்டிங்– டாக்டர் ஷெர்லி ஆன் ஜாக்சன்
அமெரிக்க தத்துவார்த்த இயற்பியலாளரான டாக்டர் ஷெர்லி ஆன் ஜாக்சன் 1970 களில் இருந்து காலர் ஐடி மற்றும் கால் வெய்டிங்’ தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
தொலை தொடர்புத் துறையில் ஷெர்லியின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், கையடக்க தொலைநகல், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள், சூரிய மின்கலங்கள் போன்ற புத்தாக்கங்களை பிறர் கண்டுபிடித்தார்கள்.
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆஃப்ரிக்க அமெரிக்க பெண்மணி ஷெர்லி ஆன் ஜாக்சன் என்பதும், உயர்-தரமுள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய முதல் ஆஃப்ரிக்க அமெரிக்கப் பெண்மணி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3. வாகனத்தின் கண்ணாடி துடைப்பான் (Windscreen wiper)- மேரி ஆண்டர்சன்
1903 ஆம் ஆண்டு, குளிர்காலத்தில் நியூயார்க் சென்ற மேரி ஆண்டர்சன், தனது வாகனத்தின் ஓட்டுநர், வாகனத்தின் முன்புறத்தில் படிந்த பனியை துடைப்பதற்காக ஜன்னலை திறக்க வேண்டியிருப்பதை கண்டார்.
ஒவ்வொரு முறை வாகனத்தின் கதவு திறக்கப்படும்போது, உள்ளே இருப்பவர்கள் குளிரால் அவதிப்பட்டார்கள்.
மேரியின் கவனம் இதனால் ஈர்க்கப்பட்டது, இதுபற்றி சிந்தித்த அவர் உடனே வேலையில் இறங்கினார். வாகனத்தின் உட்புறமிருந்தே ரப்பர் பிளேடை பயன்படுத்தி பனியை விலக்கமுடியுமா என்று சிந்தித்து செயலாற்றினார், வெற்றியும் பெற்றார். 1903 ஆம் ஆண்டில் அவருடைய சாதனத்திற்கு காப்புரிமை கிடைத்தது.
ஆனால் இந்த கண்டுபிடிப்பு, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்புவதாக கருதியதால் கார் நிறுவனங்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்தவில்லை.
ஆனால் பின்னர் வாகனங்களில் வைப்பர் பொருத்துவது கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது. மேரி தனது கண்டுபிடிப்பினால் எந்தவிதமான லாபத்தையும் பெறவில்லை.
4. விண்வெளி நிலைய பேட்டரிகள் – ஓல்கா டி கோன்சலஸ்-சனப்ரியா
இது இந்த பட்டியலுக்கு இவரது பெயர் பொருத்தமானதா என்ற கேள்வி எழலாம். ஆனால் நீண்ட சுழற்சி ஆயுள் கொண்ட நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் மின்சார தேவைகளுக்கு உதவியதால் ஒல்கா டி கோன்சலஸ் சனப்ரியாவின் பெயரும் இடம்பெறுவது முக்கியமானது.
பியூர்டோ ரிகோவைச் சேர்ந்த ஓல்கா டி கோன்சலஸ்-சனப்ரியா, 1980களில் நிக்கல்-ஹைட்ரஜன் பேட்டரி உருவாக்க உதவிய தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். தற்போது நாஸாவின் க்ளென் ஆராய்ச்சி மையத்தில் பொறியியலாளர் பிரிவின் இயக்குநராக பணிபுரிகிறார்.
5. டிஷ்வாஷர் – ஜோசபின் கொச்ரானே
விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஜோசபின், தனது பணியாளர்களை விட பாத்திரங்களை விரைவாக கழுவவும், குறைவான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு சாதனத்தை உருவாக்கவும் விரும்பினார்.
ஒரு செப்பு கொதிகலனில் சக்கரத்தை திருப்பும் மோட்டா ர் ஒன்றை பொருத்தி பாத்திரம் கழுவும் டிஷ் வாஷர் சாதனத்தை அவர் வடிவமைத்தார். தண்ணீர் அழுத்தத்தை பயன்படுத்திய முதல் தானியங்கி சாதனம் இது.
குடிகார கணவரின் மரணத்திற்கு பிறகு, அவர் விட்டுச் சென்ற கடன்களை அடைக்கவேண்டும் என்பதால் கடுமையாக உழைத்தார் ஜோசபின். அயராத முயற்சியினால், தனது கண்டுபிடிப்புக்கு 1886 ஆம் ஆண்டில் காப்புரிமை பெற்ற அவர், சொந்தமாக டிஷ்வாஷர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்.
6. வீட்டு பாதுகாப்பு அமைப்பு – மேரி வான் பிரைட்டன் பிரவுன்
செவிலியராக பணிபுரிந்த மேரி வான் பிரைட்டன் பிரவுன், வீட்டில் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருந்தது. பாதுகாப்பாக உணர்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக கண்டுபிடிக்கப்பட்டது வீட்டு பாதுகாப்பு அமைப்பு (Home security system).
1960களில் அவர் வசித்த பகுதியில் குற்றச் செயல்கள் அதிகமாக இருந்த நிலையில், போலிசாரின் நடவடிக்கை மெத்தனமாக இருந்தது. அந்த சூழ்நிலையில், தனது கணவர் அல்பெர்ட்டுடன் இணைந்து மேரி வான் பிரைட்டன் பிரவுன் இந்த பாதுகாப்பு அமைப்பை வடிவமைத்தார்.
சற்று சிக்கலான இந்த சாதனம், ஒரு மோட்டார் மூலம் இயக்கப்படுவது. கதவில் இருக்கும் பாதுகாப்பு துளை மூலம் வீட்டிற்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் இருப்பதை ஒரு கேமரா மூலம் பார்க்கமுடியும்.
அவரது படுக்கையறையில் இருந்த ஒரு மானிட்டரில் எச்சரிக்கை பொத்தான் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்தது.
7. ஸ்டெம் செல் பிரித்தெடுத்தல் – ஆன் சுகுமோடோ
1991 ஆம் ஆண்டில் ஸ்டெம் செல் பிரித்தெடுப்பதற்காக காப்புரிமை பெற்ற ஆன் சுமுமோடோவின் கண்டுபிடிப்பு, புற்றுநோயாளிகளின் இரத்த அமைப்புகளை புரிந்து கொள்வதற்கான முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது, இதனால் நோய்க்கான சிகிச்சையும் எளிதானது.
ஸ்டெம் செல் வளர்ச்சி தொடர்பான ஆராய்ச்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கும் ஆன் சுமுமோடோ, இதைத்தவிர, ஏழுக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளுக்கு இணை காப்புரிமை பெற்றிருக்கிறார்.
8. கெவலர் – ஸ்டெபானி குவ்லக்
துப்பாக்கி குண்டு துளைக்காதவாறு தயாரிக்கப்படும் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உடல் கவசங்களில் பயன்படுத்தப்படும் லேசான ஃபைபரை கண்டுபிடித்த வேதியியலாளர் ஸ்டெபானி குவ்லக்.
எஃகை விட ஐந்து மடங்கு வலிமையானதாக இருக்கும் லேசான ஃபைபர் 1965ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்களால் ஸ்டெபானியின் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுகிறது.
வீட்டில் பயன்படுத்தப்படும் கையுறைகள், சஸ்பென்ஷன் பாலங்கள் மற்றும் மொபைலில் இருந்து விமானங்கள் வரை ஸ்டெபானியின் கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படுகிறது.
9. மோனோபோலி (விளையாட்டு சாதனம்)- எலிசபெத் மேகி
சார்லஸ் டாரோ என்பவரே வரலாற்றில் மிகவும் பிரபலமான பலகை விளையாட்டை உருவாக்கியவர் என்று அறியப்படுகிறார். ஆனால் எலிசபெத் மேகியே இந்த விளையாட்டிற்கான விதிகளை உருவாக்கியவர்.
முதலாளித்துவத்துவ பிரச்சனைகளை வெளிப்படுத்த விரும்பிய மேகி, போலி பணம் மற்றும் சொத்துக்களை வர்த்தகம் செய்யும் புதுமையான விளையாட்டை உருவாக்க விரும்பினர்.
1904-இல் அவர் உருவாக்கிய விளையாட்டு ‘லேண்ட்லார்ட்’ஸ் கேம்’ என்ற பெயரில் காப்புரிமை பெற்றது.
இன்று நாம் அறிந்த மோனோபலி விளையாட்டு 1935-ஆம் ஆண்டில் பிரேக்கர் சகோதரர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, டாரோ மட்டுமே இதற்கு ஒரே படைப்பாளி இல்லை. மேகியின் காப்புரிமையை வெறும் 500 டாலர்களுக்கு வாங்கி, மோனோபலி விளையாட்டை ஏகபோகமாக்கிக் கொண்டார்.
இதுபோன்று பல பெண் கண்டுபிடிப்பாளர்கள் இருந்தபோதிலும், அவர்கள் பிரபலமாக பேசப்படவில்லை.
பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் ட்விட்டரில் எங்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு பிடித்தமானவற்றை #100Women என்ற ஹேஷ்டாகை பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள்.