இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அரசின் சார்பில் இன்னும் மூன்று வாரங்களில் பதில் அளிக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(20) தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்த விவகாரம் தொடர்பில் பதிலளிப்பதற்கு மூன்று வாரங்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு காலம் எடுத்துக்கொள்வதால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எட்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து ஈராண்டுகளே கடந்துள்ளன என்று சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதன்போது சுட்டிக்காட்டினார். ஆபத்தானது என்கிறது மஹிந்த அணி இலங்கையின் உள்விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டு நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயற்பட்டுவருகின்றார் என்றும் மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற
உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நிலையியல் கட்டளையின் 23/2இன் கீழ் வினாக்களைத் தொடுத்து உரையாற்றுகையிலேயே தினேஷ் குணவர்தன மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 36ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதன்போது ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல்ஹுசைன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அசமந்தமாகச் செயற்பட்டுவருவதாகவும், இந்நிலைமை நீடித்தால் அது சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அனைத்துலக மட்டத்தில் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் இலங்கை விடுபட்டுவிட்டதாக ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ச்சியாக
அறிவித்துவருகின்றனர். ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லை என்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிவிப்பானது இலங்கையின் உள்விவகாரத்தில் மீண்டும் தலையிடுவதாகவே அமைந்துள்ளதாகவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது பாரதூரமான பிரச்சினையாகும். இறையாண்மையுள்ள நாட்டை அச்சுறுத்தவே ஆணையாளர் முற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிப்பு விடுக்கவேண்டும் என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.