ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அமெரிக்க – நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமன்றின் முன்னால் நூதன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன்படி மாதிரி நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டு இந்த நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
001-17 வழக்கு எண்ணுக்கு அமைய, அனைத்துலக சிவில் சமூகம் இலங்கைக்கு எதிராக மாதிரி நீதிமன்றில் வழக்கினைத் தொடுத்திருந்தது
தமிழினத்தின் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை தொடர்பிலான ஆதரங்களை முன்வைத்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வழக்குரைஞர்கள் முன்வைத்துள்ளனர்.இனப்படுகொலையின் சாட்சியங்களாக பொதுமக்கள் சூழந்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72வது கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐ.நாவின் முன்னால் மாதிரி குற்றவிசாரணை கூண்டில் அமைத்து கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் பல்லின மக்களும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டிருந்த போது இவ்வாறு மாதிரி விசாரணை மையமாக தமிழர்கள் மேற்கொண்டிருந்த போராட்டம் பலரது கவனத்தினைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருக்கின்ற நிலையில், இலங்கை ஒரு குற்றவாளி நாடு என அடையாளப்படுத்தும் வகையில், மைத்திரிபால சிறிசேன குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தார்.மைத்திரபால சிறினோவினை அடையாளப்படுத்தும் வகையில் அவரது முகம் பதிக்கப்பட்ட முகமூடியுடன் ஒருவர் குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்தார்.
இலங்கை அரசு மீதான தமிழினப்படுகொலை குற்றச்சாட்டுக்களை வழக்குரைஞர்களாக வேடம் அணிந்திருந்தோர் அடுக்கினர்.பலரது கவனத்தினைப் பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.