வடக்கு மாகாணத்தில் வருடாந்தம் சுமார் 700 பேர் தற்கொலை செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டார்.
வடக்கில் இடம்பெறும் தற்கொலைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில் 2009 முதல் 2016 வரையான காலப்பகுதியில் வடக்கில் மாத்திரம் சுமார் 1000 பேரளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2013இல் 714 பேரும், 2014இல் 647 பேரும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த விடயத்தை அரசாங்கத்தினதும், நாடாளுமன்றத்தினதும், குறிப்பாக மாகாண சபையினதும் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மாகாணத்தில் வருடாந்தம் சுமார் 700 பேரளவில், தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலையில் அவர்களில் 300 பேரளவில் மரணிக்கின்றனர்.
இது விளையாட்டான நிலைமை அல்ல என மாகாண முதலமைச்சருக்கும், உறுப்பினர்களுக்கும் கூறுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு தற்கொலை முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை மிகவும் அபாயமான நிலைமையாகும். எனவே இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்தி அதற்கு தீர்வொன்றை காண வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.