தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சில், சமீபத்தில், அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட, ரோட்ரிகோ டியூடர்ட், ‘போதை மருந்து கடத்துபவர்களை சுட்டுக் கொல்வேன்’ என, தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றதும், போதை மருந்து கும்பலை சுட்டுத்தள்ள உத்தரவிட்டார். இதுவரை, 4,000க்கும் மேற்பட்டோரை, விசாரணை இன்றி, போலீசார் சுட்டுக் கொன்றனர்; இதற்கு, மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ரோட்ரிகோவின் மகனும்,டாவோ மாநகராட்சி துணை மேயருமான பாலோ டியூடர்ட் மீது, போதை மருந்து கடத்தல் புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து, பார்லிமென்டில் விசாரணை நடந்தது.
அங்கு ஆஜரான, பாலோ டியூடர்ட், குற்றச்சாட்டுகளை மறுத்தார். எனினும், பாலோ மீதான குற்றச்சாட்டு வலுவடைந்து வருவது, அதிபர், ரோட்ரிகோவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிலாவிலுள்ள அதிபர் மாளிகையில், அரசு பணியாளர்கள் மத்தியில், ரோட்ரிகோ பேசியதாவது:என் மகன், போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டது உண்மையெனில், அவனை சுட்டுக் கொல்லும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ‘நீ போதை மருந்து கடத்தியிருந்தால், போலீசார் உன்னை சுட்டுக் கொல்வர்’ என, என் மகனிடம் கூறிவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.