கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்காக புதிய விதத்திலான சசாதனையொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்காவின் மத்திய மாகாண தலைநகரான கண்டியைச் சேர்ந்தவர்கள் சிறுவர் துஸ்பிரயொக குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ளனர்.
ஒசரி பொட (Osari Pota) என அழைக்கப்படும் சிங்கள கலாசாரத்தில் திருமண மனப் பெண்ணின் சீலையின் நீளமான முந்தானையை வடிவமைத்து சாதனை நிகழ்த்த முயற்சித்தவர்களுக்கே இந்த சவால் ஏற்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனையை மேற்கொள்ள நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களை நடுத்தெருவில் அமர்த்தியதினால் சிறுவர் துஷ்பிரயோகமாக அதனை கருதுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கண்டித்துள்ளது.
இது தொடர்பான விசாரணை ஒன்றையும் அந்த அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதேச பொலிஸ் பிரதானிகள் மற்றும் பிக்குமார்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்த திருமண நிகழ்வில் மணமகள் அணிந்திருந்த திருமணச் சீலையின் முந்தானைப் பகுதி கன்னொருவ சந்தி தொடக்கம் கண்டி அலவத்துகொட சரத் ஏக்கநாயக்க முன்பள்ளி சிறுவர் நிலையம் வரை நீளமுடையதாக தைக்கப்பட்டுள்ளது.
அதனை காட்சிக்காக சுமந்து நிற்பதற்காக அப்பகுதி பாடசாலைகளைச் சேர்ந்த 250 மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டமை ஐ.பி.சி தமிழ் கமராவுக்குப் பதிவாகியது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு, உரிமைகள் பறிக்கப்பட்டு இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி மரினி டி லிவேரா ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திருமண நிகழ்வின் பிரசாரத்திற்காக அப்பாவி மாணவ மாணவிகளை ஈடுபடுத்துவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இதன்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இன்றைய தினம் அறிவித்துள்ளது.
மணப் பெண்ணின் சீலையின் முந்தானையை தெருத்தெருவாக இழுத்துச் செல்வதற்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவது பொருத்தமற்ற செயற்பாடு என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நிகழ்த்தப்பட்ட இந்த கின்னஸ் சாதனைக்கான முயற்சி செயற்பாட்டில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் அதேபோல இந்த திருமண நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சீலை முந்தானையின் மொத்த நீளமானது மூன்று கிலோ மீற்றர் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பில் பொது மக்களால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சும் அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.
இதேவேளை சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீலங்காவில் எந்தப் பகுதியில் நடந்தாலும் அதனை 1929 என்ற சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என்று சட்டத்தரணி மரினி டி லிவேரா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.