குறித்த நபரை நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க சென்றதற்கான காரணம் என்ன என நீதிவான் கேட்டுள்ளார். “அது தனிப்பட்ட விடயம். பரம இரகசியம். அதனை அவரிடம் மட்டுமே சொல்ல முடியும்’ என நீதிவானுக்கு சந்தேகநபர் பதிலளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு – விஜேராம வீட்டுக்குள் கத்தியுடன் பலாத்காரமாக உள் நுழைய முயன்ற இளைஞரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார நேற்று உத்தரவிட்டார்.
பலாங்கொடையை சேர்ந்த 24 வயதுடைய ஜயமால் வீரசிங்க எனும் இளைஞரையே
இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். நேற்று முன் தினம் கொழும்பு விஜேராம – பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் உள் நுழைய முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினர் அவரை தடுத்து விசாரித்துள்ளனர். தனக்கு மஹிந்த ராஜபக்ஷ்வை சந்திக்க வேண்டும் எனவும் இல்லையேல் அவ்விடத்திலேயே தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கத்தி ஒன்றினைக் காட்டி அவ்விளைஞன் மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பாதுகாவலர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து
கத்தியையும் மீட்டு கறுவாத்தோட்டம் பொலிஸாரிடம் சந்தேகநபரை ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர் நேற்று கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில்
ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க சென்றதற்கான காரணம் என்ன என நீதிவான் ரணசிங்க பண்டார சந்தேகநபரிடம் கேட்டார்.
“அது தனிப்பட்ட விடயம். பரம இரகசியம். அதனை அவரிடம் மட்டுமே சொல்ல முடியும்’ என நீதிவானுக்கு சந்தேக நபர் பதிலளித்தார்.
இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேகநபரை மனோ தத்துவ வைத்தியர் ஒருவர் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்பிக்க சிறைச்சாலை அத்தியட்சருக்கு உத்தரவிட்டார்.