போதையில் காரை ஓட்டி விபத்தை உண்டாக்கிய ஜெய்க்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு!!!

போதையில் காரை ஓட்டி விபத்தை உண்டாக்கிய ஜெய்யிடம் அசல் ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. இல்லை, இன்சூரன்ஸ் புதுப்பிக்கப்படவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

j

சுப்ரமணியபுரம், கோவா உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஜெய். இவர் குடிபோதையில் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்கியதாக சென்னை அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடப்பட்டுள்ளார்.

அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்துசெய்ய போக்குவரத்து போலீசார் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சிபாரிசு செய்துள்ளனர். இதுதொடர்பாக நடிகர் ஜெய்யிடம் விளக்கம் கேட்டு, உரிய பதிலை பெற்று அதன்பிறகு அவரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

நடிகர் ஜெய் மீதான வழக்கு குறித்து போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நடிகர் ஜெய் ஏற்கனவே குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்கியதற்காக 2 முறை அபராதம் கட்டியுள்ளார். அடையாறு போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும், கிண்டி போக்குவரத்து போலீஸ் நிலையத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் அதே வழக்கில் 3-வது முறையாக சிக்கியுள்ளார். அவரிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லை. ஓட்டுனர் உரிமத்தின் நகல் தான் வைத்துள்ளார். அவரது காருக்கான ஆர்.சி. (பதிவு சான்று) புத்தகமும் இல்லை. இன்சூரன்சும் புதுப்பிக்கப்படவில்லை. அவரது காரின் நம்பர் பிளேட் கூட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை. அவர் மீது கோர்ட்டில் தனியாகவும் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

ஜெய் மீதான வழக்கில் கோர்ட்டில் அவருக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.