தாயார் கோரிக்கை ஏற்பு பேரறிவாளன் பரோல் – அரசாணை வெளியீடு

தாயார் கோரிக்கை ஏற்பு: பேரறிவாளன் பரோல் 1 மாதம் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் 26 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

பேரறிவாளன் தனக்கு உடல் நலம் இல்லை என்று கூறி பரோல் கேட்டு இருந்தார். மத்திய அரசு அனுமதிக்காததால் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க சட்டத்தில் இடம் உள்ளதாக மத்திய உள்துறைக்கு தமிழக அரசு தெரிவித்தது.

அதன் பிறகு தன்னை பரோலில் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் மீண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவரது தந்தை டி.ஞானசேகரன் என்ற குயில்தாசனுக்கு உடல்நலம் சரியில்லை என்றும் தந்தையை அருகில் இருந்து கவனிக்க வேண்டி இருப்பதால் பரோல் வழங்க வேண்டும் என்றும் தாய் அற்புதம் அம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து மனு அளித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து பரோலுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வலியுறுத்தினார்.

இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோலில் செல்ல மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நகல் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி இரவு கிடைத்தது.

உடனே மாவட்ட போலீஸ் குற்றப்பிரிவு துணைக் காணிப்பாளர் பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் பேரறிவாளனை இரவு 8.54 மணிக்கு வேலூர் ஜெயிலில் இருந்து போலீஸ் வாகனத்தில் சொந்த ஊரான ஜோலார் பேட்டைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் பேரறிவாளனின் பரோல் நாளையுடன் முடிவடைகிறது.

இதனால் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம் அம்மாள் கோரிக்கை விடுத்தார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் சந்தித்து பேசி வலியுறுத்தினார்.

இதுபற்றி தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியது. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான கோப்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பேரறிவாளன் பரோலை மேலும் 1 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவு நகல் வேலூர் மத்திய ஜெயில் கண்காணிப்பாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

மீண்டும் 1 மாதம் பரோல் கிடைத்ததால் பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் மகிழ்ச்சி அடைந்தார். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.