படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன.
“எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் முறியடிக்க அமெரிக்க அதிபர் பல ராணுவ நடவடிக்கைகளை கொண்டிருக்கிறார்” என்பதை காட்டும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக, அமெரிக்காவும், வட கொரியாவும் சமீப காலமாக சொற்போரை நடத்தி வருகின்றன. இதனால் பதட்டம் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா தன்னை தற்காத்து கொள்ளக்கூடிய கட்டாயம் ஏற்பட்டால், வட கொரியாவை முற்றிலும் அழித்துவிடும் என்று செவ்வாய்கிழமை ஐக்கிய நாடுகள் மாமன்றத்தில் பேசிய அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில், வடகொரிய பிரதிநிதியும் சனிக்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றவிருக்கிறார்.
அதற்கு முன்னதாக, வடகொரியாவுக்கு நெருக்கமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்திருக்கின்றன.
வடகொரியாவின் முரட்டுத்தனமான நடவடிக்கையை அமெரிக்கா எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த போர் விமானங்கள் எடுத்துக் காட்டுவதாக பென்டகன் கூறியுள்ளது.
“அமெரிக்காவையும் அதன் கூட்டாளிகளையும் பாதுகாக்க எங்களது ராணுவ சக்தியை முழுமையாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோம்” என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சனிக்கிழமையன்று வடகொரியாவின் அணுசக்தி சோதனை நடத்தும் பகுதிக்கு அருகே 3.4 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாடு இன்னொரு சோதனையை நடத்தியிருக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
ஆனால், நிபுணர்களும், சர்வதேச அணுசக்தி கண்காணிப்பாளர்களும் இது இயற்கையான நிலநடுக்கம்தான் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.