இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்கள் இல்லை – இலங்கை அரசு

இலங்கையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற வேண்டிய கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஆண்டு இறுதியில் நடைபெறாது என அரசாங்கம் கூறுகின்றது.

வாக்குப் பெட்டிகள்

“பதவிக்காலம் முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கும் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.

மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய பணிகள் அடுத்த 4 மாத காலத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

கிழக்கு வட மத்திய ,மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் இம் மாதத்துடன் முடிவடைகின்றது. வட மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் அக்டோபர் 1ஆம் தேதி முடிவடைகின்றது.

பதவிக் காலம் முடிவடையும் மாகாண சபைகள் ஆளுநரின் கீழ் கொண்டு வரப்படும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறுகின்றார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே நாளில் நடத்தக் கூடியதாக நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு 20 திருத்தம் மூலம் குறித்த சபைகளின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும் என்று அரசு தரப்பில் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தது.

அரசியல் யாப்பு 20-ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் என்ற பெரும்பான்மை மூலமும் பொது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததையடுத்து இந்த திருத்தம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

பதவி முடிவடையவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கும் அடுத்த மாதம் 2ஆம் தேதி தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையமும் தயார் செய்து, செயல்பாடுகளை ஏற்கனவே முன்னெடுத்திருந்தது.

வாக்களிக்கும் இடம்

நேற்று, புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் காரணமாக தொகுதி மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு தேர்தல் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தொகுதி நிர்ணய குழு நியமிக்கப்பட்டு தொகுதிகளை நிர்ணயம் செய்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அந்த திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழைய முறையில் தேர்தல்களை நடத்த முடியாத நிலை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ரணில்

பதவிக்காலம் முடிவடையவுள்ள மாகாண சபைகளின் தேர்தல்களை ஆறு மாத காலத்திற்குள் நடத்த முடியும் என பிரதமர் இவ்வாறு கூறியிருந்தாலும், கடந்த கால அனுபவங்களை வைத்து பார்க்கும்போது 4 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் மற்றும் 6 மாதத்திற்குள் தேர்தல்கள் என்பது சாத்தியப்படும் என தெரியவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட வேண்டும்.

எல்லை நிர்ணய குழு நேரிலும் எழுத்து மூலமும் மக்கள் கருத்துக்களை பெற வேண்டும். 25 மாவட்டங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் அறிக்கை தயாரிக்க வேண்டும்.

தயாரிக்கப்பட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் அரசு வர்த்தமானியில் (கெஸட்) வெளியிடப்பட வேண்டும் .